Sunday, August 20, 2017

அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் - 99 ஆண்டுகளுக்கு பிறகு

"The Great American Eclipse"  எனும் மிகபிரமாண்டமான முழு சூரிய கிரகணத்திற்கு அமெரிக்கா தயாராகிவிட்டது.

ஆமாம், நாளை 21 ஆகஸ்ட், 2017 வட அமெரிக்காவை குறுக்காக
இரண்டாக வெட்டியது போல   பசிபிக் கடலில் தொடங்கி , அட்லாண்டிக் கடல்வரை கிரகணம்  (12 மாநிலங்கள்) தொட்டுச் சொல்கிறது. இதுபோன்றதொரு நிகழ்வு
அமெரிக்காவில்  நடந்தது 99 வருடங்களுக்கு முன்பாம்.

இதனால்,  மேற்கே ஆர்கனில் தொடங்கி கிழக்கே தென் கரோலினா வரையிலான 12 மாநில மக்களுக்கு நேரடியாக முழுமையான
கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு நாளை கிடைக்கிறது.

பூமிக்கும், சூரியனுக்கும் நடுவே சந்திரன் தோன்றி சூரியனை மறைப்பது "சூரியகிரகணம்" எனும் 7ம் வகுப்பு அறிவியல் பாடத்தை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தச் சூரிய கிரகணம்  சந்திர கிரகணம் போல்  அவ்வளவு சாது இல்லை.  கொஞ்சம் முரடானது. அதனால் மிகுந்த எச்சரிக்கை தேவையாம். ஆமாம், கிரகணத்தின் போது சூரியன் மறைந்து சில நிமிடங்கள் இருளாக இருக்கும். ஆனால் சில மணிநேரங்களுக்கு வழக்கத்தை விட சூரியன் மிகவும் பிரகாசமாக தெரியுமாம். அதனால், கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்க்க அனுமதி இல்லை. இதற்கான கறுப்பு கண்ணாடிகளை அணிந்துக் கொண்டு பார்ப்பது உத்தமம். அதை மீறி 'நாங்கல்லாம் யாரு ?' என  சட்டைக் காலரை உயர்த்திக் கொண்டு வெறும் கண்களால் பார்த்தால் இந்த அதிகப்படியான ஒளியால் கண்களை இழக்க நேரிடும். ஜாக்கிரதை!!.

உண்மையில் கிரகணத்தின் பாதையில் நேரடியாக 12 மாநிலங்கள்
மட்டும் இருந்தாலும் வடஅமெரிக்கா முழுமைக்கும்  இதன் பாதிப்பு இருக்கிறது.  அதனால் கடந்த பத்து நாட்களாகவே கிரகணம் பற்றியும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள், பள்ளிகள் மட்டுமல்லாமல் பொது இடங்களில் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

ஆனால், இதற்கான பிரத்தியோக கறுப்புக் கண்ணாடிகள் எங்களுக்குக் கிடைக்காததால் நாங்கள் வீட்டில் கைவைத்தியம் செய்வதுபோல் Pinhole Projector எனும் "  சிறுதுளை உருப்பெருக்கி"  யை செய்துவிட்டோம். கிரகணத்தைப் பார்க்க இதை விட்டால் பாதுகாப்பான வேறு வழியில்லை. இதைச் செய்வது அறிவியல் சோதனை போல பெரிய பிரமாதமில்லை
என்பதால் என் 10 வயது மகள்  யூடிப்பின் உதவியால் செய்துவிட்டாள் (படம்).


கிரகணம் முடிந்த பின்னால் குளிக்கவோ, இல்லை வீட்டைக் கழுவி விடவோ திட்டமில்லை. ஆனால், முடிந்தால் வீடியோ எடுக்கும் திட்டமிருக்கிறது. அது நடந்தால் பகிர்கிறேன்.


படங்கள் நன்றி
yahoo.com
https://www.nasa.gov/

1 comment:

  1. காணொளியைக் காணக் காத்திருக்கிறேன் நண்பரே

    ReplyDelete