Sunday, June 26, 2016

சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்

சமீபத்தில் எஸ்.ரா.வின் "சஞ்சாரம்" நாவல் வாசித்தேன். நாவலுக்குள் செல்லும் முன் எனக்கும் இசைக்குமான பரிச்சயத்தைச் சொல்லிவிடுகிறேன்.

நான் வளர்ந்த திருவாரூருக்கும் இசைக்கும் நெருங்கியத் தொடர்பிருக்கிறது.  கர்னாடக சங்கீதத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி எனும் மும்மூர்த்திகள் பிறந்த ஊர் திருவாரூர்.

தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றில் வருடாவருடம் நடைபெறும் புகழ்பெற்ற தியாகராஜ ஆராதனை விழா இசை நிகழ்ச்சியைப் போல திருவாரூரில் மும்மூர்த்திகளின் நினைவாக வருடாவருடம் மும்மூர்த்திகள் ஆராதனை விழா நடைபெறும்.  சுமார் ஓரு வாரம் நிகழும் அந்த விழாவுக்குச் சிறுவயதில் தினமும் என்னுடைய பாட்டனாருடன் சென்றிருக்கிறேன்.

அதுபோல் திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வருடாவருடம்  தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது பின்னிரவு வரை கலைஞர்களின்  இசைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இப்படிதான் ஜேசுதாஸ், பாம்பே சகோதரிகள், நித்யஶ்ரீ, கன்னியாக்குமரி, குன்னக்குடி, விக்கி வினாயக்ராம்  போன்ற பல புகழ் பெற்ற இசைக்கலைஞர்களின் இசையை நேரடியாக கேட்டும் பார்த்தும் அனுபவித்திருக்கிறேன்.

தஞ்சை மண்ணில் வளர்ந்த எனக்கு இப்படி பல இசை அனுபவங்கள் இருந்தாலும் நாதஸ்வரம்  அன்னியமில்லாத, மனத்துக்கு நெருக்கமான ஒன்று.

சரி, சஞ்சாரம் நாவலின் கதைக்கு வருவோம். நாவலின் கதைக்களம் கரிசல் மண். கதை அங்குள்ள இரு நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றியது.

பக்கிரி, ரத்தினம் எனும் அந்த இரு நாதஸ்வர கலைஞர்களை ஒரு கிராம மக்கள் அவமதிக்கிறார்கள். அவர்களைப் பழிவாங்கும் வகையில் பக்கிரி செய்யும் ஒரு காரியம் அங்கே சில உயிர்களை காவு வாங்கிவிடுகிறது. அதனால் அவர்கள் போலீஸுக்குப் பயந்து பல ஊர்களுக்குப் பயணமானபடி இருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் அவர்கள் நினைவுகளின் வழியாக நாதஸ்வரக்கலையையும், கலைஞர்களையும், கரிசல் மண்ணையும் ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

கரிசல் காட்டு நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வை ஆவணப்படுத்த வேண்டும் எனும் நல்ல மனநிலையில் ரசனையோடு  பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் பாராட்டுக்குரியவர்.

ஆசிரியர்  பல ஆய்வுகளையும் களப்பணியையும் செய்திருப்பார் என நினைக்கிறேன்.  ஒரு கதைக்குள் வேவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்த பல கிளைக் கதைகள். அதில் அபூர்வமான, ஆச்சர்யமூட்டும் வரலாற்றுத் தகவல்கள் பல இருக்கின்றன.

கரிசல் காட்டின் பல நுட்பமான தகவல்களைப் பதிவு செய்கிறார். உதாரணமாக. அது போன்ற ஓரு காலத்தில் அதே ஊரோடிப் பறவைகள் திரும்பவும் வானில் பறந்து வந்தன. .. கரிசல் கிராமங்களின் மீது பறந்தபடியே 'ஊராரே ஊராரே மண்ணு வேணுமா, பொன்னு வேணுமா' எனக் கேட்டன” (பக்கம்-53)

ஊரோடிப் பறவைகளைப் பற்றி   கோபல்ல கிராமத்தில் படித்த நினைவு இருக்கிறது. அந்த வகையில் கி.ரா.வின் ஆஸ்தான கோட்டையான கரிசல் பூமியை எஸ்.ரா.வும் கொண்டாடி மகிழ்கிறார்.

மாலிக் காபூர் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்த நிகழ்வைச் சொல்லும் 'அரட்டானம் '  எனும் தலைப்பில் வரும் பகுதி அட்டகாசம். அருமையான கதைச் சொல்லலில் அந்த  நிகழ்வுகள் நம் கண்முன்னே அழகாய் விரிகின்றன. (பக்கம்-46)

மாலிக் காபூர் படையெடுத்து வந்தபோது அரட்டானம் என்ற கரிசல் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலைக் கொள்ளையடிக்கப் படைகளுடன் நுழைகிறான். ஊரே காலிசெய்து ஓடிவிட நாயனக்காரர் லட்சய்யா   என்பவர் மட்டும் கோவிலில் நாதஸ்வரத்தை மெய்மறந்து வாசித்தபடி இருக்கிறார். அவர் வாசிப்பில் கல்லால் செய்யப்பட்ட யானைச்சிலையும் காதை அசைப்பதைப் பார்த்து மாலிக் காபூர் பிரமித்து அந்த கோயிலை கொள்ளையிடாமல் சென்றான் என கதை தொடர்கிறது.

ஆசிரியர் கரிசல் மண்ணின் நாதஸ்வரக் கலைஞர்களின் அன்றைய வாழ்வையும் இன்றைய நிலைமையையும் ஒரே புனைவுக்குள் கொண்டுவர முயற்சித்திருக்கிறார். ஆனால், நாவலை வாசிக்கும்போது வாசகனால் நூறு சதவீதம் கதையோடு சேர்ந்து பயணப்பட முடியவில்லை.  துண்டு துண்டாகப் பல செவிவழிக் கதைகளை ஒன்றாக இணைத்து நாவலை அமைத்ததுபோல ஒரு உணர்வு மேலிடுகிறது.   அதே போல்,   கதாபாத்திரங்களை இன்னமும் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

கதையில் அன்றைய மாலிக் காபூரையும், இன்றைய சிகரெட் அட்டை பொறுக்கும் சிறுவனையும் ஒரே புனைவில் எளிதாக ஆசிரியர் இணைத்துச் செல்கிறார். ஆனால் படிக்கும் வாசகனால் அவ்வாறு முடியவில்லை. அதற்கு மொழி நடையும் ஒரு காரணமாக இருக்கலாம். கரிசல்மண் எனும் இந்த கதைக்களத்தை வட்டார வழக்கில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றுகூடத் தோன்றுகிறது.

அது மட்டுமில்லாமல், சில கிளைக் கதைகள் மையக்கதைக்குத் தொடர்பில்லாமல்  இருக்கின்றன. உதாரணமாக 'கிதார மகாலிங்கத்தின்' கதையைச் சொல்லலாம் (பக்கம் 196). அவருக்கும் நாதஸ்வரத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.  அது ஒரு கரிசல் காட்டு செவிவழிக் கதை என்பதைத் தவிர வேறுசிறப்பு இருப்பது மாதிரித் தெரியவில்லை.

ஆனால், நாவலை வாசித்து முடித்த பின்பும் நாதஸ்வரத்தின் இனிமையான ஒலியை மீண்டும் ஒருமுறையேனும் கேட்கவேண்டும், கேட்டு ரசித்து அதில் லயிக்க வேண்டும் எனும் ஆவலை வாசகனுக்கு உண்டாக்கி விடுவதில் ஆசிரியரின் வெற்றி இருக்கிறது.

இசை மேல் ஆர்வமிருக்கும் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.

அப்புறம், வாய்ப்பிருந்தால் பிபிசி வெளியிட்ட 'மறைந்து வரும் மங்கல இசை'  எனும் செய்திக் கோவையின் ஒலிவடிவத்தை நீங்களும் கேட்டுப் பாருங்கள். நாதஸ்வரம் பற்றிய மிக அருமையான, விரிவானதொரு ஆவண ஒலிப்பேழை இது.

http://www.bbc.com/tamil/arts_and_culture/nagaswaramseries ( இணைப்பு )

இந்தக் கட்டுரை ஆம்னிபஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.


http://omnibus.sasariri.com/2016/06/blog-post_16.html


சஞ்சாரம் – நாவல் – எஸ் ராமகிருஷ்ணன் – 375 பக்கங்கள்
 – விலை ரூ.370 – உயிர்மை பதிப்பகம், 11,29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18

6 comments:

  1. இப்புத்தகத்தைப் படிக்கவில்லை. ஆனால் பிபிசியின் நாதஸ்வரம் பற்றிய தொடர் கேட்டுள்ளேன். இத் தொடரில் இஸ்லாமிய சமூகத்தின் நாதஸ்வரம் தொடர்பான பகுதியில் ஷேக் சுபானி காலிஷா பீபீ தம்பதியினர் பேட்டியில், இஸ்லாமியராக குங்கும திலகமிடுவது பற்றிய தகவல், எனக்கு சற்று பிரமிப்பைத் தந்தது. இக்கலை இன்று நம் நாடுகளில் அதன் பெறுமதி தெரியாமல், அழிவு நிலைக்கு வருகிறதோ என அஞ்சுகிறேன். அன்று குறைந்தது 2 1/2 மணி நேர வானொலிக் கச்சேரிகளை சென்னை, திருச்சிராப்பள்ளி வானொலியூடு, இலங்கையில் இருந்து கேட்டேன். இன்று வானொலி, தொலைக்காட்சியில் 1/2 மணி நேரக் கச்சேரிகளை ஏனோதானோ என நடத்துவதைப் பார்க்கையில் இவ்வுன்னத கலையை உதாசீனம் செய்கிறார்களே என வேதனை மேலுறும். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கூட இக்கலை வளர நிலைக்க ஏதும் செய்யாதது, பெருந்துயர். பல கலைஞர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இக்கலையைக் கற்பிக்க விரும்பவில்லை என்பது மிகக் கசப்பான உண்மை. கர்நாடக இசையின் ஏனைய கூறுகளுக்கு உள்ள கியாதி, இதற்கு இல்லாமல் போகவைத்து விட்டார்கள் சாதி எனும் கொடுமையால். ஆனால் நாதஸ்வரம் தவில் இசைக்கு ஒப்பும்,மிகுதியும் இல்லையென்பதை பல இசை விற்பன்னர்கள் உணர்வார்கள்.நல்லதை நாடாத சமூகமாக ஏன் தமிழ்ச்சமுதாயம் வேகமாக மாறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நாதஸ்வர இசைமேல் தங்களுடைய பிரியத்தை, அந்த நாள் வானோலி நினைவுகளை பகிர்ந்த்தற்கு நன்றி. இயல்பாகவே தமிழர்களை பழைமையை போற்றுவதில் சுணக்கம் காட்டுபவர்களை எனும் குற்றச்சாட்டு உண்டு. அதில் உண்மையில்லாமலும் இல்லை. நாதஸ்வர இசையும், கலைஞர்களும் காப்பாற்றபட வேண்டிய ஓன்று.

      Delete
  2. அருமையான விமர்சனம் நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு, தொடர் உற்சாகத்துக்கு நன்றி நண்பரே.

      Delete
    2. Johan Baskar Comment is nice to me...

      Delete