Sunday, May 1, 2016

கவிஞர்களும் களங்களும் - கலைபாரதி

நண்பர்களே, கடந்த முறை இந்தியா சென்றபோது  நண்பர் கலைபாரதியின் "கவிஞர்களும் களங்களும்" எனும் கட்டுரைத் தொகுப்பை எனது பள்ளிதோழரும் கவிஞருமாகிய தமிழ்மணி கொடுத்திருந்தார். கலைபாரதி எனக்கு தமிழ்மணி மூழமாகதான் அறிமுகமானவர்.

கலைபாரதி தமிழாசிரியராக அரசு பணியில் இருக்கிறார். நல்ல தமிழ் உணர்வாளர்,  கடின உழைப்பாளி மட்டுமில்லால் தொடர்ந்து நிறைய வாசிப்பவர். நண்பர் தமிழ்மணிகூட ஓரு தமிழாசிரியர் தான்.

அரசு ஆசிரியர்களைப் பற்றி எவரேனும் பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்துகையில்  நான் இவர்களைப் போன்ற நல்ல ஆசிரியரைகளை நினைத்துக் கொள்வேன். இவர்கள் தங்களின் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை தாண்டி மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தையும், சுய சிந்தனையையும் தூண்டும் விதத்தில் கற்பிப்பவர்கள். இதுபோன்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் குறைந்து வருகிறார்கள் என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை.

கடந்த வாரம் நூலை வாசித்து முடித்தவுடன் ஓரு நல்ல நண்பருடன் உணர்வுப்பூர்வமாக உரையாடியது போலோரு அனுபவம் எனக்கு.  அதனால் இதற்கு அறிமுகம் எழுதிவிடுவது என நினைத்து இன்று அது நிறைவடைந்திருக்கிறது.

பிரபல எழுத்தாளர்களுக்கு மட்டும் நூல் அறிமுகம் அல்லது விமர்சனம் எழுதும் நல்ல பழக்கத்தை (!) பலர் பெரும்பாலும் கடைப்பிடிக்கிறார்கள்.
அது அந்த எழுத்தாளர்களின் புகழுக்குக் கீழ்  குளிர்காய்வது அல்லது அவர்களின் வெளிச்சத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சி என்பது எனது தாழ்மையான கருத்து.   சரி விசயத்துக்கு வருவோம்.

கலைபாரதி அவர்கள் மாதவம்  இதழுக்காக எழுதியவற்றின் தொகுப்பு இது.
சமூக அவலங்களைப் பற்றிய தனது கவலையை ஆற்றாமையோடு பல சமூகக் களங்களில் கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

இந்த நூலை ஓரு தீப்பெட்டி எனில், அந்தத்  தீப்பெட்டியில் பெண்ணடிமை, உலகமயமாக்கல், சாதீயம், தீண்டாமை, இன்றைய கல்விமுறை, அழியும் விவசாயம் என்று பல தீக்குச்சிகள் எனச் சொல்லும் அளவுக்கு, கட்டுரைகளில் பொறி இருக்கிறது.



ஓரு மனிதனுக்குள் இத்தனை முகங்களா ? என மலைக்கும்படி   ஓவ்வோரு கட்டுரையிலும் தேர்ந்தேடுத்த பொருத்தமான கவிதைகளுடன் தன் கருத்துகளை நறுக்கு தெறித்தார்போல் முன்வைக்கிறார்.  இவரைப் பொருத்தவரை கவிதை என்பது காலத்தின் விளைச்சல். அது அனுபவத்தின் விளைபொருள் என்கிறார்.

அந்த வகையில் இந்த நூல் சந்தேகமின்றி நல்ல விளைச்சல் தான். உதாரணமாக- தறுதலைப் பசுக்கள் எனும் கட்டுரையில்  (பக்கம்-13)

"புத்தகங்களே
சமர்த்தாக இருங்கள்..
குழத்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்"

என குழந்தைகளுக்காக வாதாட கவிக்கோ அப்துல் ரகுமானை  துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

உரைநடையை இது போன்ற நல்ல கவிதைகளுடன் சேர்ந்து வாசிப்பது ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவது போன்றதோரு நல்ல அனுபவமாயிருக்கிறது.

ஆசிரியரும் ஓரு கவிஞர் என்பதால் இதுபோன்றதோருக் கட்டுரைகள் அவருக்கு கைகூடுகின்றன என்பதில் நமக்கு சந்தேகம் தேவையில்லை.

பெண்ணடிமைத் தனத்தைப் பேசுகையில்  (பக்கம்-28)

"குடும்பம் துறந்த
சித்தார்த்தன்
புத்தனாக மாறினான்.
நம்பி வந்த
யசோதா
என்ன ஆனாள் ?"

எனக் கேட்கும் போது கவிஞர் பாலபாரதியுடன் சேர்ந்துக் கொள்கிறார்.

"கொலு வைக்கும் வீடுகளில்
ஓரு குத்து சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்று
தங்கச்சி பாப்பாக்களைத்
தூக்க முடியாமல் தூக்கிவரும்
அக்கா குழந்தைகள்"

எனச் சுண்டலுக்காகவும், வாழ்தலுக்காகவும் கையேந்தும் குழந்தைகளுக்காகக் கவிஞர். கலாப்ரியாவுடன் விசனப்படுகிறார் (பக்கம்-41).

அழியும் இயற்கை வளங்கள் போன்ற சமூக அவலங்களையும் கண்டு மனம் சினந்து வெகுண்டுள்ளார்.

"நண்டுகள் கபடி ஆடிய
வயல்களில்
வாண்டுகளின் மட்டைப் பந்தாட்டம்"

எனும் தமிழ்மணியின் துளிப்பாவை (பக்கம்-20) வாசிக்கையில் நம் கண்களில் கண்ணீர்த்துளி.

இது கலைபாரதியின் நல்ல அழுத்தமானதொருப் படைப்பு. வாய்ப்பிருந்தால் வாசிக்கவும்.

தலைப்பு :கவிஞர்களும் களங்களும்
எழுத்தாளர்: கலைபாரதி
பதிப்பகம்: பாவணர் பதிப்பகம், போன்- 9842011344
பக்கங்கள்: 80
விலை : ரூ.60

No comments:

Post a Comment