Saturday, October 31, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-1

       கடந்த வாரம் அலுவலக சம்பந்தமாக லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்க்கு சென்று திரும்பினேன். லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  இவர்தான் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க கவர்னர் என்பது  கூடுதல் தகவல்.


என் பயணத்தை பற்றி விரிவாக எழுதும் முன்பாக.  உங்களில் எத்தனைப் பேருக்கு 'கத்ரீனா சூறாவளி' பற்றி தெரிந்திருக்கும் என்றுத் தெரியவில்லை.

கத்ரீனா  கடந்த 2005ம் ஆண்டு  நியூ ஆர்லியன்ஸை நகரைத் தாக்கிய மிகப் பெரிய சூறாவளி.  இதுவே அமெரிக்காவைத்தாக்கிய மிகப் பெரிய  மற்றும் மூன்றாவது வலுவான புயல்.

அப்போது நகரில் புகுந்த நீரலைகள் உயர் 20 அடி (ஆறு மீட்டர்) இருந்ததாம். இதில்  உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 பேர்.  இந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விமானத்தின் மேலிருந்து- வரிசையாய் தீப்பெட்டி போன்ற வீடுகள், நகரும் எறும்பு போன்ற கார்கள். இரவில் நட்சத்திரங்களை வாரி இறைத்தது போன்ற நகரம் என ரசிக்கும்படியே இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சில விஷயங்களில் இதுவும் ஓன்று. இதைப்பற்றிக் கூட யாரேனும் ஓரு கட்டுரை எழுதலாம்.

அப்புறம் அமெரிக்க விமானங்களின் உள்நாட்டு சேவையில் உணவு வழங்குவதை நிறுத்தி வருடங்கள் பலவாயிற்று.  சிற்றுண்டி என்ற  பெயரில் கோக் மற்றும் சிறிய வேர்கடலை பாக்கேட் போன்ற எதாவது ஓன்றை தருவார்கள். இந்த முறை அலர்ஜி என காரணம் சொல்லி அதையும் நிறுத்திவிட்டார்கள். அலர்ஜி பயணிகளுக்கா அல்லது அவர்களுக்கா என நான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  இந்தியாவில் இன்னமும் விமானத்தில் பொங்கல் வடை தருகிறார்களா? தெரியவில்லை. அப்படியேனில் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான். :)

விமானத்தில் கவனித்த இன்னோரு விஷயம் விமானப்பணிப் பெண்கள். வழக்கம் போலவே அழகாக இருந்தனர், முக்கியம் அதுவல்ல. அழகாய் லிப்ஸ்டிக் உதடு விரிய சிரிப்பது, ஹைஹீல்ஸில் கேட்வாக் நடப்பதைத்தாண்டி அவர்கள் துரிதமாகவும்,லாவகமாகவும் உணவு
வழங்குவது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

வழக்கம் போலவே விமானத்தில் பெரும்பான்மையானவர்கள் புத்தகங்களில் தங்கள் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர்  என்று எழுதினால் அது சம்பர்தாயமாகவே இருக்கும்.  ஏனேனில் புத்தகம் படிப்பவர்கள் எல்லோரும் குறைந்தது ஐம்பது வயதிற்கு மேலுல்லவர்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக்கு கண்களையோ இல்லை காதுகளையோ
கொடுத்திருந்தனர்.  இருபது வருடங்களுக்கு பின் புத்தகம் அச்சடிப்பது பற்றி கவலைப்படத் தேவையிருக்காது போல.

இந்தக் கட்டுரையில் எங்கேனும் நீங்கள் தேடிப்பார்த்து அதில் கொஞ்சம் சுஜாதாவின் சாயல் இருந்தால் அதற்கு காரணம் நான் விமானத்தில் படித்த 'கற்றதும் பெற்றதும்' தான். இதற்கும் மேலே எழுதியதற்கும் தொடர்புபடுத்தி என் வயதை நீங்கள் தவறாக கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. புத்தக உபயம் 'தமிழ்'-நன்றி.

பயணங்கள் முடிவதில்லை...

No comments:

Post a Comment