Thursday, July 23, 2015

கேபிள் சங்கரின் பார்வையில் சினிமா வியாபாரம்

சங்கர் நாராயண் என்கிற கேபிள் சங்கர் எழுதிய
சினிமா வியாபாரம்  புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.

எவரும் இந்த  புத்தகத்தை  பரிந்துரைக்காவிடிலும், இணையத்தில்
பலர் எழுதிய விமர்சனங்களின் அடிப்படையில் கடந்த மாதம்
இந்தியாவில் இருந்து தருவித்து வாசித்தேன். நான் வாங்கிய நேரம் பாருங்க 90 ரூபாய் இருந்த புத்தகம் இப்போ 125 ரூபாயாம்.   அடக் கடவுளே!

கேபிள் சங்கர் - இணையதள ஏரியாவில் அறிமுகம் தேவையில்லாதவர்.
பல சிறுகதைகள், கட்டுரைகள், திரை விமர்சனஙகள் வழியாக
பரிட்சமானவர்.  மேலும் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

நவீன தமிழகத்தின் வரலாற்றை எழுதுவதேன்றால் சினிமாவை
தவிர்த்துவிட்டு எழுத இயலாது என்பது  நிதர்சனம். அந்தஅளவுக்கு
சினிமா நம்முடைய பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

அப்படிப்பட்ட சினிமா எனும் கலைவடிவம் நடிப்பு, பாடல், நடனம், கதை, தொழில்நுட்பம் எனும் பல கோணஙகளை உடையது.  இந்த புத்தகத்தில் சினிமாவை அதன் வியாபரக் கோணத்தில் அனுகியிருக்கிறார் கேபிள் சங்கர்.

திரைத்துரையில் விநியோகஸ்தர்-சீரியல் ஆக்டர்-வசனகர்த்தா-திரைக்கதை ஆலோசகர் எனும் தனது அனுபவங்களின் மூலம்  எழுதியிருக்கிறார். புத்தக முன்னுரைக்காக அதிகம் மெனக்கெடாமல் ஆசிரியர் சுயஉரையுடன் முடித்துக் கொண்டுள்ளார்.

இது  'லைட் ரீடிங்' எனும் வகையைச் சார்ந்த புத்தகம். எளிய சரளமான நடை.  ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியதால் சாமானியர்கள் தலை சொறியத் தேவையில்லை.

ஒரு படம் தயாரிக்கப்பட்டபின் திரைக்கு வரும் வரை நடக்கும் பல விடயங்ககளை புத்தகம் விரிவாக விளக்குகிறது.

விவசாயத்தில் விவசாயிகளை விட பெரும்பாலும் இடைத்தரகர்கள் அதிகம் பயனடைவது போல, சினிமாவிலும் தயாரிப்பாளர்களை விட இடைத்தரகர்கள் அதிகம் லாபம் அடைவது எப்படி என்பதையும் விளக்குகிறார்.

இதேபோல், சினிமா வியாபாரத்தில் உள்ள பல அடுக்குகள் படிக்கும் வாசகர்களைக் கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்தும்.

ஹாலிவுட்சினிமாவையும் கூட ஆசிரியர் கொஞ்சம் தொட்டிருக்கிறார்.

சினிமா வியாபாரத்தைப் பற்றி எழுதிய ஆசிரியர் தமிழ் சினிமாவில் காலங்காலமாகப் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் பற்றி மூச்சு விடவில்லை.

ஹாலிவுட் தரவுகளை தரும் ஆசிரியர் துரதிருஷ்டவசமாகத்  தமிழ் சினிமா துறை பற்றி விரிவான மற்றும் ஆழமான தரவுகளையும் கொடுக்கவில்லை.

உதாரணமாக. தமிழ் சினிமாவின்  மொத்த வருடாந்த வருவாய் என்ன ? தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில்  PERCENTAGE என்ன ? வருடாந்த கேளிக்கை வரி  வருவாய் என்ன ?  போன்ற நிறைய  'என்ன' க்கள்.

இது போலவே புள்ளி விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தால்  மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

திரைப்படத் துறைக்குப்   புதியவர்கள் அல்லது  திரைத்துறை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.


நுால்: சினிமா வியாபாரம்
பிரசுரிப்பவர்: மதி நிலையம்.
கிடைக்கும்: Discovery Book Palace

No comments:

Post a Comment